பிசாசு அறையுமா…?
வாயில் நுரையுடன் ரத்தம் கக்கி திடீரென்று மரணமடைபவர்களை பற்றி கிராமபுரத்தில் ஒரு கதை சொல்வார்கள், “கொள்ளிவாய் பிசாசு அறைந்து விட்டது. அதனால்தான் வாயில் ரத்தம் கக்கி செத்துவிட்டான்” என்று. உண்மையில் கொள்ளிவாய்ப் பிசாசு அறையுமா…! வெறும் காற்றாக சித்தரிக்கப்படும் ஆவியான கொள்ளிவாய்ப் பிசாசுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா? என்று மருத்துவத் துறையினரிடம் கேட்டால், “அதெல்லாம் சும்மா…! முதலில் கொள்ளிவாய் பிசாசு என்ற ஒரு ஜந்து உலகில் இல்லை” என்கிறார்கள்.வாயில் நுரை கக்கி சாவது எல்லாம் உடலில் ஏற்படும் கோளாறால்தான் என்று உண்மையைச் சொல்கிறார்கள்.
ஹார்ட் பெய்லியர் என்ற இதயத்தின் செயல் திறன் குறைவதால் ஏற்படும் பாதிப்பே இந்த கொள்ளிவாய்ப் பிசாசு அறைந்த கதை.
அமெரிக்காவில் எடுக்கப்பட்ட சர்வேயில் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்தினர் ஹார்ட் பெய்லியர் என்ற நோய்க்கு ஆட்பட்டு இருப்பதாக குறிப்பிடுகிறது. 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் 10 சதவீதம் பேருக்கு இந்த நோய் இருக்கிறது.
சரி,ஹார்ட் பெய்லியர் என்றால் என்ன? ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். புதிதாக ஒரு கார் வாங்குகிறோம். ஆரம்பத்தில் அது காடு, மேடு, மலை என்று எளிதாகப் பயணிக்கும். அதுவே பல ஆண்டுகள் ஓடி பழைய கார் ஆனா பின்பு என்ஜினின் சக்தி குறைந்த பின்பு மலைப்பகுதியில் ஏற திணறும். இப்படித்தான் இதயமும் வயது ஆக ஆக உடலின் எல்லா பாகங்களுக்கும் தேவையான ரத்தத்தை அனுப்ப முடியாமல் திணறுகிறது. இந்த திணறலைத்தான் ஹார்ட் பெய்லியர் என்கிறோம்.
இதயம் என்பது ஒரு பம்பிங் மோட்டார் போல செயல்படுகிறது. நுரையீரலில் இருந்து வரும் ரத்தத்தை பம்ப் செய்யும் மோட்டார்தான் இதயம். இதயத்திலிருந்து ரத்தக்குழாய்கள் மூலம் உடல் முழுக்க ரத்தம் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் இதயம் என்ற பம்பின் செயல்திறன் குறைந்து, அது வேலை செய்வது தடைப்பட்டால் என்னவாகும்? ரத்தம் நுரையீரலிலேயே தேங்கிக்கிடக்கும். தொடர்ந்து ரத்தம் நுரையீரலில் தேங்கும் போது அங்கு ரத்த அழுத்தம் அதிகமாகிறது. அந்த அழுத்தம் தாங்காமல் சிறு ரத்த குழாய்கள் வெடிக்க நேருகிறது. இதெல்லாம் ஆரம்பநிலைதான், இதை சரி செய்து விடலாம். இவற்றில் எல்லாம் அசட்டையாக இருந்தால் இறுதிகட்ட நிலைதான் வாயில் ரத்தம் கக்கி இறப்பது.
ஹார்ட் பெய்லியர் உள்ளது என்பதை இரண்டு முக்கிய அறிகுறிகள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். உடல் சோர்வடைவது, மூச்சு வாங்குவது. இந்த அறிகுறிகளை அசட்டை செய்தால் விளைவுகள் மோசமாகும். ஹார்ட் பெயிலியரின்போது உடல் பாகங்களுக்கு தேவையான அளவு ரத்தம் சப்ளை செய்யப்படாததால் உடல் சோர்வடைகிறது. சின்ன வேலை செய்தால் கூட மூச்சு வாங்குகிறது. இந்த அறிகுறிக்குப் பின்பும் கூட விபரீதம் புரியாமல் மெத்தனமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த அவர்களை ‘அக்யூட் பல்மொனரி எடிமா’ என்ற மோசமான கட்டத்திற்கு கொண்டு சென்றுவிடும். வாயில் நுரையுடன் சில சமயங்களில் ரத்தமும் சேர்ந்து வரலாம். இதைத்தான் கொள்ளிவாய்ப் பிசாசு அறைந்துவிட்டதாக கூறுகிறார்கள். உடனே மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் தீவிர சிகிச்சை மூலம் காப்பாற்றி விடலாம். கொள்ளிவைப் பிசாசு அறைந்து விட்டது என்று சோகமாக இருந்தால் உயிர் பிரிந்துவிடும் அபாயமும் உண்டு.
கொள்ளிவாய் பிசாசு எப்போதும் யாரையும் கொன்றதில்லை என்பதே உண்மை.
மார்க்ஸ் பற்றி ஏங்கல்ஸ்
உலகப் பொருளாதாரத்தின் பைபிள் என்று சொல்லக்கூடிய ‘டாஸ் கேபிட்டல்‘ அதாவது மூலதனம் என்ற புத்தகத்தை எழுதிய காரல் மார்க்ஸ் மறக்க முடியாத ஒரு மேதை. இவருடைய நண்பர் பிரடெரிக் ஏங்கல்ஸ்.
இவர்கள் இருவரையும் நட்புக்கு சிறந்த உதாரணமாக சரித்திரம் குறிப்பிடும். மார்க்ஸ் இறந்த போது எங்கல்ஸ் ஆற்றிய உரையே அதற்கு சாட்சி.
“இதோ இந்த மார்ச் 14-ந் தேதி மதியம் 3மணிக்கு இவன் சிந்தனையில் மூழ்கிக் கொண்டிருந்தான். அவனை நங்கள் இரண்டு நிமிடங்கள் தனிமையில் விட்டுச் சென்றோம். திரும்பி வந்து பார்க்கையில் இனி விழிப்பே இல்லாத தூக்கத்தில் அவன் நாற்காலியில் உறங்கிப் போயிருந்தான். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பாட்டாளி மக்கள் புரட்சி வரலாற்றில் இம்மனிதனின் சிறப்பு மதிப்பிட முடியாதது.
டார்வின் எவ்வாறு பரிணாம வளர்ச்சி விதியை கண்டடைந்தரோ அதுபோல் மார்க்ஸூம் மனித வரலாற்றின் வளர்ச்சி விதியை கண்டடைந்தான்.
அரசியல், மதம், அறிவியல், கலை இவற்றை அடையும் முன் உன்ன உணவு, உடுத்த உடை, குடிக்க நீர், இருக்க இடம் ஆகியவற்றை மானுடம் பெற வேண்டும் என்று இவன் உலகுக்கு சொன்னது எளிய உண்மைதான். ஆனால் அதோடு முதலாளித்துவ அடிப்படையிலான உற்பத்தி முறையும், அது யாருக்கு பணிந்து செல்கிறது என்ற உண்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்வதில் தான் இவனுக்கு விருப்பம்.
முதலாளித்துவ சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்து விட்டு பாட்டாளி வர்க்கத்தை அரியணையில் அமர வைக்க அரும்பாடுபட்டான். போராட்டம் எனும் ஆயுதம் கொண்டு தன் இறுதிமூச்சு உள்ளவரை உழைத்தவன்.
எத்தனை பேர் வேண்டுமானாலும் இவன் மீது குற்றம் சுமத்தலாம். பழி போடலாம். ஆனால் அவன் பாட்டாளிகளை நேசித்தான். உழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்தான். மார்க்ஸ் பிறக்கும் போது யூதனாக பிறந்தான். புரட்சிக்காரனாக வளர்ந்தான். போராளியாக இவன் பெயர் நிலைத்து இருக்கும். அவன் எழுத்துக்களும் அப்படி தான்.”
இப்படி தனது நண்பனுக்காக ஏங்கல்ஸ் ஓர் உணர்ச்சிப்பூர்வ உரையாற்றினர்.
உலக பொருளாதாரத்தின் சூத்திரம் சொல்லும் புகழ்பெற்ற டாஸ் கேபிட்டல் புத்தகம் இன்று பல பதிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த புத்தகத்தை தன் உயிரினும் மேலான நண்பர் ஏங்கல்ஸூக்கு அர்ப்பணித்திருந்தார், மார்க்ஸ்.
துப்பறிய உதவும் டி.என்.ஏ.
உலகில் கோடிக் கணக்கான மனிதர்கள் இருகிறார்கள்.இவர்களில் ஒருவரின் கைரேகை போல மற்றொருவரின் கைரேகை இருப்பதில்லை. உலகில் உள்ள 720 கோடி மக்களுக்கும் 720 கோடி கைரேகைகளை இயற்கை வரைந்திருக்கிருது. இதைப்போலவே மற்றொரு அற்புதத்தையும் உயிரினங்களின் உடலில் இயற்கை ஏற்படுத்தி இருக்கிறது. அதுதான் மரபணு என்று சொல்லப்படுகிற டி.என்.ஏ. ஒருவருடைய டி.என்.ஏ.வரைபடம் மற்றொருவருடன் ஒருபோதும் ஒத்துப்போகாது. இதனை மூலக்கூருகையெத்து என்கிறார்கள்,விஞ்ஞானிகள்.
இந்த மூலக்கூற்றை வைத்து மிகத்துல்லியமாக துப்பறிய முடியும். மனிதனின் கைரேகையை விட இது கூடுதல் துல்லியம் மிக்கதாக இருக்கும். டி.என்.ஏ. வரைபடம் என்பது ஒரு கருப்புப் பட்டையில் இடையில் இடைவெளிகளைக் கொண்டிருக்கும். இதில் காணப்படும் இடைவெளிகளைக் கொண்டே டி.என்.ஏ.வின் வரைபடத்தில் வேறுபாடுகள் கண்டறியப்படுகின்றன.
மனிதனின் உடலை உருவாக்கத் தேவையான எல்லாவகை மூலப்பொருட்களையும் அவற்றின் குறியீடுகளையும் டி.என்.ஏ.வரைபடம் கொண்டுள்ளது. நமது உடலை எப்படி நடத்திச்செல்வது, செயல்பட வைப்பது போன்ற வழிகாட்டுதல்களும் இவற்றில் பொதிந்துள்ளன. ஒரு சிசுவின் மரபணுக்களில் சரிபாதி தாயிடமிந்தும், மீதி தந்தையிடமிருந்தும் வருகின்றன. அதனால்தான் குழந்தை தாய், தந்தை இருவரின் குணநலன்களும் கலந்த கலவையாக இருக்கிறது.
இந்த டி.என்.ஏ. மூலம் மருத்துவமனையில் காணாமல் போகும் குழந்தையைக் கண்டுபிடிக்கலாம். பாலியல் வன்முறைக்கு ஆளாகி கருவுற்ற பெண்ணின் தந்தையைக் கண்டுபிடிக்கலாம். குழந்தையின் உடலின் இருந்து எடுக்கப்படும் டி.என்.ஏ.யை தாய்-தந்தை டி.என்.ஏ.யுடன் பொருத்திப் பார்க்கும் பொது கண்டுபிடித்து விடலாம். ஒருவரின் கண்ணீர், வியர்வை, ரத்தம், விந்து, சட்டையில் ஒட்டியுள்ள தோலின் செல்,நகம் போன்றவற்றின் மூலம் டி.என்.ஏ. வரைபடம் தயாரிக்க முடியும். இதுவே துப்பறிவதற்கு மிகவும் உதவுகிறது.
ஆட்சியை மாற்றிய மாணவர்கள்
மாணவர்கள் நினைத்தால் ஆட்சியை கூட மாற்றமுடியும் என்று உலகுக்கு உணர்த்திய நாடு இந்தியா. இந்த புரட்சி நடந்தது அசாம் மாநிலத்தில்.
1971-இல் நடந்த இந்திய பாகிஸ்தான் போரின் முடிவில் கிழக்கு பாகிஸ்தான் ‘பங்களாதேஷ்’ என்ற புதிய நாடாக உருவானது. போர் உச்ச கட்டத்தில் இருந்த போது ஏராளமான பங்களாதேஷ் வாசிகள் அசாமில் அகதிகளாக குடியேறினர். குடியேறியவர்கள் போர் முடிந்தும் அவர்களின் தாய்நாட்டிற்கு திரும்பவில்லை.
லட்சக்கணக்கான அகதிகள் இந்தியாவிலே தங்கிவிட்டதால் மண்ணின் மைந்தர்களான அசாமியர்களுக்கு வேலை கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டன. அதனால், அகதிகளாக வந்தவர்கள் மீண்டும் அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையோடு உருவானதுதான் ‘அனைத்து அசாம் மாணவர் சங்கம்’
இந்த மாணவர்கள் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரம் அடைந்து, ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது. அகதிகள் அனைவரும் அடையாளம் கண்டு தாக்கப்பட்டார்கள். சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். மாணவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் 7 ஆண்டுகளாக அனைத்து கல்லூரிகளும் பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன.
மாநில அரசால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் மாநிலம் வந்தது. இந்த நிலையில் 1983-ம் ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல்கள் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே வேளையில் அகதிகளாக வந்திருந்த 30 லட்சம் பேரும் அசாம் மாநில வாக்காளர் பட்டியலில் சேர்க்கப் பட்டிருந்தனர்.
இவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டுத்தான் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், மீறி நடத்தினால் தேர்தலை புறக்கணிப்போம் என்று அசாம் மாணவர் சங்கம் அறிவித்தது. ஆனால், இதையெல்லாம் இந்திய அரசு காதில் வாங்கவில்லை.ராணுவ அடக்குமுறையோடு தேர்தலை நடத்தியது.
தேர்தலை புறக்கணிக்குமாறு மாணவர் சங்கம் எச்சரிக்கை விட்டது. வெறும் 32 சதவிகித வாக்குகளே பதிவானது. பெரும்பாலான வாக்குசாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. தேர்தல் நடந்த 109 தொகுதிகளில் 91 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது.
அரசுக்கு எதிரான மாணவர் போராட்டம் தீவிரமடைந்தன. தினமும் சராசரியாக 25 பேர் கொல்லப்பட்டனர். 1984-ல் இந்திரா காந்தி மறைவிற்கு பின், பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி, அசாம் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மாணவர் சங்கங்களுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். அதன்படி 10 லட்சம் பேர்களின் வாக்கு பறிக்கப்பட்டது. காங்கிரஸ் பதவி விலகியது.
மீண்டும் 1985-ல் தேர்தல் நடத்தப்பட்டது. அசாம் கனபரிஷத் கட்சி, மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 66 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 66 பேரில் 65 பேர் திருமணம் ஆகாத இளைஞர்கள். அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.
உலகில் வேறு எங்கும் இப்படியொரு புரட்சி நடந்ததில்லை. மாணவர்களின் போராட்டத்தால் ஆட்சியை மாற்றி காட்டியதும் இல்லை.
பண்ணை வீட்டில் ஒருநாள்
பரபரப்பான இந்த உலகில் இருந்து விலகி, விளைநிலங்களுக்கு நடுவே… கறவை மாடுகளுக்கு மத்தியில்…வித்தியாசமாக விடுமுறையை கழிக்க நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது, சுர்ஜீவன். அழகான தோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட ஓலைக்குடிசை வீடுகள் நமக்காகவே காத்திருக்கின்றன.
மார்பிள் தரையிலும், பளிங்கு படிகளிலும், கிரானைட் அறைகளோடு வாழ்ந்து பழகியவர்களும் சாணம் மெழுகிய மண் தரை வித்தியாசமான அனுபவத்தைத் தரும். பண்ணை வீடுகள் எப்படி என்ற அனுபவத்தை உணர்வுப் பூர்வமாக உணரலாம்.
வெறுமனே பண்ணை வீட்டில் தங்குவதோடு இந்த பயணம் முடிந்து விடாது… நம்மூர் மாட்டு வண்டிகள் போல் ஒட்டகங்கள் பூட்டிய வண்டிகளில் வலம் வரலாம். விவசாய வேலைகளை பார்வையிடலாம். பாறைகள் மீது ஏறலாம். பாராகிளைடிங் பண்ணலாம். இப்படிப்பட்ட சாகஸங்களும் இங்குண்டு.
மேலும் பண்ணையில் விளையும், ஃப்ரெஷ் காய்கறி, வாசனைப் பொருட்களோடு தயாரான ரொட்டிகளையும் சாதத்தையும் சாப்பிட்டு மகிழலாம்.
போக்குவரத்து நெரிசலும், மக்கள் கூட்டமும் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று நினைப்பவர்கள் இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள குர்கான் நகருக்கு சென்று வரலாம். நாட்டிலேயே சிறந்த ஷாப்பிங் மால்கள் இங்கு இருக்கின்றன. இந்தப் பண்ணை வீடுகளில் தங்க குளிர்காலமே சிறந்தது.
எப்படி போவது?
ஹரியானா தலைநகர் சண்டிகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் மானேஸர் என்ற ஊரில் இந்த பண்ணை வீடுகள் இருக்கின்றன. சாலை வழியாக 6 மணி நேரத்தில் சென்று சேரலாம்.
எங்கு தங்குவது?
சுர்ஜீவன் பண்ணை வீடுகள் தங்குவதற்கு ஏற்ற இடம். ஒருநாள் இரவு தங்க ரூ.5000-ல் இருந்து கட்டணம் பெறப்படுகிறது.