உலகப் பொருளாதாரத்தின் பைபிள் என்று சொல்லக்கூடிய ‘டாஸ் கேபிட்டல்‘ அதாவது மூலதனம் என்ற புத்தகத்தை எழுதிய காரல் மார்க்ஸ் மறக்க முடியாத ஒரு மேதை. இவருடைய நண்பர் பிரடெரிக் ஏங்கல்ஸ்.
இவர்கள் இருவரையும் நட்புக்கு சிறந்த உதாரணமாக சரித்திரம் குறிப்பிடும். மார்க்ஸ் இறந்த போது எங்கல்ஸ் ஆற்றிய உரையே அதற்கு சாட்சி.
“இதோ இந்த மார்ச் 14-ந் தேதி மதியம் 3மணிக்கு இவன் சிந்தனையில் மூழ்கிக் கொண்டிருந்தான். அவனை நங்கள் இரண்டு நிமிடங்கள் தனிமையில் விட்டுச் சென்றோம். திரும்பி வந்து பார்க்கையில் இனி விழிப்பே இல்லாத தூக்கத்தில் அவன் நாற்காலியில் உறங்கிப் போயிருந்தான். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பாட்டாளி மக்கள் புரட்சி வரலாற்றில் இம்மனிதனின் சிறப்பு மதிப்பிட முடியாதது.
டார்வின் எவ்வாறு பரிணாம வளர்ச்சி விதியை கண்டடைந்தரோ அதுபோல் மார்க்ஸூம் மனித வரலாற்றின் வளர்ச்சி விதியை கண்டடைந்தான்.
அரசியல், மதம், அறிவியல், கலை இவற்றை அடையும் முன் உன்ன உணவு, உடுத்த உடை, குடிக்க நீர், இருக்க இடம் ஆகியவற்றை மானுடம் பெற வேண்டும் என்று இவன் உலகுக்கு சொன்னது எளிய உண்மைதான். ஆனால் அதோடு முதலாளித்துவ அடிப்படையிலான உற்பத்தி முறையும், அது யாருக்கு பணிந்து செல்கிறது என்ற உண்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்வதில் தான் இவனுக்கு விருப்பம்.
முதலாளித்துவ சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்து விட்டு பாட்டாளி வர்க்கத்தை அரியணையில் அமர வைக்க அரும்பாடுபட்டான். போராட்டம் எனும் ஆயுதம் கொண்டு தன் இறுதிமூச்சு உள்ளவரை உழைத்தவன்.
எத்தனை பேர் வேண்டுமானாலும் இவன் மீது குற்றம் சுமத்தலாம். பழி போடலாம். ஆனால் அவன் பாட்டாளிகளை நேசித்தான். உழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்தான். மார்க்ஸ் பிறக்கும் போது யூதனாக பிறந்தான். புரட்சிக்காரனாக வளர்ந்தான். போராளியாக இவன் பெயர் நிலைத்து இருக்கும். அவன் எழுத்துக்களும் அப்படி தான்.”
இப்படி தனது நண்பனுக்காக ஏங்கல்ஸ் ஓர் உணர்ச்சிப்பூர்வ உரையாற்றினர்.
உலக பொருளாதாரத்தின் சூத்திரம் சொல்லும் புகழ்பெற்ற டாஸ் கேபிட்டல் புத்தகம் இன்று பல பதிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த புத்தகத்தை தன் உயிரினும் மேலான நண்பர் ஏங்கல்ஸூக்கு அர்ப்பணித்திருந்தார், மார்க்ஸ்.